மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்: மின்வாரிய பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
திண்டிவனம்,
மயிலம் அருகே உள்ள வீடூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). இவர் செண்டூர் துணை மின் நிலையத்தில் ஒயர்மேனாக உள்ளார். சம்பவத்தன்று இவர் பாதிராப்புலியூர் பகுதியில் பழுதான மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். மின்கம்பத்தில் ஏறி மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது, திடீரென சிவபெருமாளை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி காயமடைந்த சிவபெருமாளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், மருத்துவர்களிடம் கேட்டறியவில்லை. மேலும் அவர் காயமடைந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், மின்வாரியத்திற்கும் உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை என மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் சதாசிவம், விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் மின்சாரம் தாக்கி ஊழியர் காயமடைந்தது குறித்து உரிய தகவல் அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட வீடூர் துணைமின் நிலைய உதவி பொறியாளர் சிலம்பரசன், செண்டூர் துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் மகேஷ்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய செயற்பொறியாளர் சதாசிவம் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story