100 நாள் வேலை வழங்கக்கோரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


100 நாள் வேலை வழங்கக்கோரி  யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 May 2020 4:53 AM GMT (Updated: 21 May 2020 4:53 AM GMT)

100 நாள் வேலை வழங்கக்கோரி பணிக்கநேந்தல் மற்றும் பாம்பாட்டி கிராம பெண்கள் காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே உள்ள பாம்பாட்டி ஊராட்சிக்குட்பட்ட பாம்பாட்டி கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்க உத்தரவிட்டதால் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி 50-வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

முற்றுகை

கிராமத்தில் உள்ள 50-வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து காரியாபட்டி யூனியன் அலுவலத்தில் வந்து 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டனர். இதே சமயத்தில் பணிக்கநேந்தல் கிராமத்தை சேர்ந்த பெண்களும் 100 நாள் வேலை வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.

கோரிக்கை மனு

மேலும் கிராம பெண்கள் காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து கிராம பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் தொழில் முடக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தற்போது 100 நாள் வேலை வழங்கப்படாதது வேதனையாக உள்ளது. இதனால் தற்போது குடும்பத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story