மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத 198 மையங்கள் முதன்மை கல்வி அதிகாரி தகவல்


மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத 198 மையங்கள் முதன்மை கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 5:09 AM GMT (Updated: 21 May 2020 5:09 AM GMT)

கரூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத 198 மையங்கள் தயார்படுத்தப்படுகிறது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவராமன் தெரிவித்துள்ளார்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத 198 மையங்கள் தயார்படுத்தப்படுகிறது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவராமன் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி தொடங்கி, 25-ந்தேதி வரை தேர்வு நடைபெறும் என நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தில், தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். மாணவர்களின் வசதிக்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கரூர் கல்வி மாவட்டத்தில் 35-ல் இருந்து 115-ஆக தேர்வு மையங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குளித்தலை கல்வி மாவட்டத்தில் 21-ல் இருந்து 83 மையங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 198 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட உள்ளன.

12,627 பேர் எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 6,162 மாணவர்கள், 6,079 மாணவிகள், 386 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 627 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு பணியில் 1,791 அறை கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய 129 பேர், 98 முதன்மை கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 2,126 பேர் ஈடுபட உள்ளனர்.

Next Story