சாலை விரிவாக்க பணிக்காக விழுப்புரத்தில் மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி


சாலை விரிவாக்க பணிக்காக விழுப்புரத்தில் மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி
x
தினத்தந்தி 21 May 2020 10:56 AM IST (Updated: 21 May 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்க பணிக்காக விழுப்புரத்தில் மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

விழுப்புரம், 

விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால அவகாசம் அளித்து நோட்டீசு அனுப்பப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

மேலும் சாலையோரமாக இருந்த பழமையான மரங்களும் அகற்றப்பட்டன. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள், மரங்கள் அகற்றப்பட்ட இடங்கள் சமப்படுத்தப்பட்டு அப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டு, சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. மேலும் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக சாலை விரிவாக்க பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணியும் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சாலை பணிகள், கட்டுமான பணிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை பணிகள், அரசு கட்டிட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் கம்பன்நகர், திருநகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதையொட்டி கம்பன் நகர், திருநகர், ஆசிரியர் நகர், தேவநாதசாமி நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாற்றியமைக்கப்பட்ட மின் கம்பங்களுக்கு மின் மாற்றி மூலம் இணைப்பு கொடுத்தனர்.

Next Story