சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு: கலெக்டர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வெளிமாநில தொழிலாளர்கள்


சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு:  கலெக்டர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வெளிமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 21 May 2020 5:53 AM GMT (Updated: 21 May 2020 5:53 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் காலில் விழுந்து வெளிமாநில தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

சிவகங்கை, 

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூற்பு ஆலைகள், ஓட்டல்கள் மற்றும் கட்டிட தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதால் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சிவகங்கையை அடுத்த அரசனூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 70 தொழிலாளர்களை 2 பஸ்களில் ஏற்றி அனுப்ப மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அவர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு பஸ்களில் புறப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பொன்னாடை அணிவித்து அனுப்பி வைத்தார்.

காலில் விழுந்தனர்

இதையடுத்து அந்த தொழிலாளர்கள் கலெக்டரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் வேலை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 பேர், பீகார் மாநிலத்தை சேர்ந்த 185 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், மணிப்பூரை சேர்ந்த ஒருவரும், ஒடிசாவை சேர்ந்த 60 பேர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 460 பேரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி உடனிருந்தார்.

Next Story