6 பேர் கும்பல் கைது விவகாரம்: புதுக்கோட்டையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? போலீசார் விசாரணை


6 பேர் கும்பல் கைது விவகாரம்: புதுக்கோட்டையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 May 2020 5:54 AM GMT (Updated: 21 May 2020 5:54 AM GMT)

கள்ளநோட்டு விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

கள்ளநோட்டு விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளநோட்டு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மூங்கிதான்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் கொடுத்து மதுவாங்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கைதானார். அவருடன் கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சித்த ராமச்சந்திரன், முகமது இப்ராகிம், முகமது நசுருதீன் ஆகியோர் கைதாகினர்.

மேலும் கள்ளநோட்டுகளை அச்சடித்து வினியோகித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன், சென்னையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2,000 கள்ளநோட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கூறுகையில், “ரூ.1,000 நல்ல நோட்டு கொடுத்தால் ரூ.2,000 கள்ளநோட்டு என்ற அடிப்படையில் சந்தோஷ்குமார் அதனை வாங்கி உள்ளார். சென்னையில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி வந்த அவர் புதுக்கோட்டையில் மேலும் புழக்கத்தில் விட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டி உள்ளது. ஊரடங்கு நேரத்தில் எளிதில் மாற்றிவிடலாம் என்று இந்த கும்பல் திட்டமிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் வேறெங்கும் கள்ளநோட்டுகளை மாற்றினார்களா? எனவும் விசாரிக்க உள்ளோம். இந்த வழக்கில் தொடர் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Next Story