நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பணிபுரியும் 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் இன்று பீகார் அனுப்பி வைப்பு
நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்கள் 1,464 பேர் இன்று சிறப்பு ரெயிலில் பீகாருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் மெகராஜ் நேற்று பார்வையிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1,464 நபர்கள் மட்டுமே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரெயிலில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 860 நபர்களும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 604 நபர்களும் பீகார் மாநிலம் செல்ல உள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் பீகார் மாநிலம் ஷிவான், ஆஜிப்பூர், மூஜாப்பர்பூர், சமஸ்திபூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இன்று பஸ்கள் மூலம் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வழியனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பீகார் மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப செய்யப்பட்டு உள்ள சிறப்பு ரெயில் ஏற்பாட்டிற்கான முன்னேற்பாடுகளை நாமக்கல் ரெயில் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில், கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் வருவாய்த்துறை, ரெயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்வில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story