ஈரோடு மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 1,464 பேர் ரெயில் மூலம் அனுப்பிவைப்பு


ஈரோடு மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 1,464 பேர் ரெயில் மூலம் அனுப்பிவைப்பு
x

ஈரோடு மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 1,464 பேர் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் வட மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் போது இவர்களுக்கு கடுமையான வேலை இழப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சொந்த ஊர் பயணத்துக்கு ஏற்பாடு செய்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் தலைமையிலான அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் முதல் வடமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்த அளவில் தங்கள் ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இருந்தனர். எனவே அவர்களது ஊருக்கு செல்லும் ரெயில் தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்து புறப்படுகிறது என்பதை தெரிந்து, அந்த ரெயில் நிலையங்களுக்கு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நடந்தது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் நேற்று ஒரே ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு 24 பெட்டிகள் கொண்ட ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாகனங்கள் மூலம் ரெயில் நிலைய வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டு ஒரு டோக்கன் மற்றும் ரெயில் டிக்கெட் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக போதிய இடைவெளி விட்டு ரெயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு இருக்கைகளில் உட்கார வைக்கப்பட்டனர். படுக்கை வசதி கொண்ட இந்த ரெயிலில் 1,464 பேரும் சிரமம் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடமாநில தொழிலாளர்கள் வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் தொழிலாளர்களை அழைத்து வந்தவர்களிடம் அறிவுரைகள் வழங்கி, அதனை அனைவருக்கும் எடுத்துக்கூற கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக நேற்று காலையில் இருந்தே வடமாநில தொழிலாளர்களை வழியனுப்புவதற்கான பணிகள் ரெயில் நிலையத்தில் நடந்தன. ரெயில் நிலையத்தில் வெளி நபர்கள் யாரும் வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமின்றி அந்தந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த நிறுவனங்களிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. நிறுவனங்கள் சாராமல் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கியும், மருத்துவ பரிசோதனையும் செய்தனர். எனவே மாலையில் தொழிலாளர்கள் வந்ததும் அவர்கள் நேரடியாக ரெயில்களில் ஏற்றி வைக்கப்பட்டனர். ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார்கள் பரிமளாதேவி (ஈரோடு), ரவிச்சந்திரன் (மொடக்குறிச்சி), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story