வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பினர் செல்போன் செயலியை முடக்கி செல்போன் எண்களை திருடிய வடமாநில கும்பல்


வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பினர் செல்போன் செயலியை முடக்கி செல்போன் எண்களை திருடிய வடமாநில கும்பல்
x
தினத்தந்தி 21 May 2020 10:15 PM GMT (Updated: 21 May 2020 8:50 PM GMT)

செல்போன் செயலியை முடக்கி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை திருடிய வடமாநில கும்பல், வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் ஆபாச படங்களை அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

செல்போன் செயலியை முடக்கி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை திருடிய வடமாநில கும்பல், வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதில் ஆபாச படங்களை அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வடமாநில கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பெங்களூரு அருகே நாகவாரா ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு செல்போன் செயலி மூலம் பாடம் கற்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்காக பள்ளி மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களை அந்த பள்ளி நிர்வாகம் சேகரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தது. இந்த நிலையில் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களின் செல்போன் எண்களை கொண்டு பைன்ட் யூவர் லவ்-2083 என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆபாச இணையதள லிங்குகளை சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்தனர். அப்போது இதுபோல் வாட்ஸ்-அப் குழுவை நாங்கள் தொடங்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கூட்டாக பெங்களூரு மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இந்த குழுவின் அட்மின்களாக இருப்பவர்களின் சிம்கார்டுகள் மேற்குவங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்தது என்பதும், வடமாநிலங்களை சேர்ந்த கும்பல், அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் செல்போன் செயலியை முடக்கி, அதில் இருந்த மாணவர்களின் செல்போன்களை திருடி, வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி ஆபாச படம், வீடியோக்களை அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

அந்த வடமாநில கும்பலை பிடிக்க பெங்களூரு மேற்கு மண்டல சைபர்கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பெங்களூருவில் ஏற்கனவே இதுபோல் ஒரு பள்ளியின் செல்போன் செயலியை முடக்கிய மர்மநபர்கள், அந்த செயலியில் ஆபாச வீடியோ, படங்களை பதிவிட்டிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.


Next Story