பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு:  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 3:08 AM IST (Updated: 22 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

பிரசவித்த பின்னர் திடீரென இறந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 25). இவரது மனைவி மாயா(20). இவர் பிரசவத்துக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 19-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நள்ளிரவில் திடீரென மாயா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மாயாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவையில் இருந்து ஆம்புலன்சில் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்க காந்தல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விசாரணை நடத்திய பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநோயாளிகள் பிரிவு

இதற்கிடையில் நேற்று காலை ஊட்டி தாசில்தார் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று வெளிநோயாளிகள் பிரிவு செயல்படக்கூடாது என்று கூறி அதற்கான நோட்டீசுகளை ஒட்டினர். அதில் வெளிநோயாளிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ், ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரியில் மாயா பிரசவித்த பெண் குழந்தையை அரசு டாக்டர்கள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 1 மாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு மாவட்ட கலெக்டர் மூலம் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story