முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


முதுமலை புலிகள் காப்பகத்தில்   வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 21 May 2020 10:18 PM GMT (Updated: 21 May 2020 10:18 PM GMT)

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. நடப்பாண்டில் அடுத்த 2 வாரங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஒவ்வொரு காலக்கட்டங்களில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

அங்கு முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, பெண்ணை, சிங்காரா, மசினகுடி, சிகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. 688 சதூர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், மான்கள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் வறட்சியால் வனம் பசுமை இழந்து காணப்பட்டது. இதனால் வனவிலங்குகளும் இடம் பெயர்ந்தன.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளதால், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிக்கு வனத்துறையினர் ஆயத்தமாகினர். இதற்காக முதுமலை தெப்பக்காட்டில் கடந்த சில நாட்களாக வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, பெண்ணை வனச்சரக பகுதியில் நேற்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். முதுமலை, தெப்பக்காட்டில் வனச்சரகர் தயானந்த், கார்குடியில் வனச்சரகர் சிவக்குமார், பெண்ணையில் வனச்சரகர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 29 பேர் கொண்ட குழுக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய கணக்கெடுப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்களை கொண்டு கணக்கெடுத்தனர்.

2 கட்டங்களாக...

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படும். பின்னர் பருவமழைக்காலம் நிறைவு அடைந்த பிறகு மீண்டும் கணக்கெடுக்கப்படும். மழைக்கு முன்பாக 2 கட்டங்களாக முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) முதல் வருகிற 26-ந் தேதி வரை முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, பெண்ணை வனச்சரகங்களில் கணக்கெடுப்பு நடைபெறும். தொடர்ந்து 27-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி வரை மசினகுடி, சிங்காரா, சிகூர், தெங்குமரஹாடா வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நேரில் காணுதல், கால் தடங்கள், எச்சங்கள் கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story