புதுவை- காரைக்காலுக்கு அரசு பஸ்கள் இயக்கம்; குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம்


புதுவை- காரைக்காலுக்கு அரசு பஸ்கள் இயக்கம்; குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம்
x
தினத்தந்தி 22 May 2020 4:03 AM IST (Updated: 22 May 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி-காரைக்காலுக்கு இடைநில்லா அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுவையில் நேற்று முன்தினம் முதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்கின்றனர்.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பஸ்களை இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களிடம் இதுகுறித்து அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து புதுவையில் இருந்து காரைக்காலுக்கு நேற்று காலை அரசு பஸ் இயக்கப்பட்டது. 57 இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் 33 பயணிகள் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினி தரப்பட்டு கைகளை சுத்தம் செய்யவும் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டது. பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டது. டிரைவர், கண்டக்டர் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்றினர். பயணத்தின் போது சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அவ்வப்போது பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பஸ்சை வழியனுப்பும் நிகழ்ச்சியில் அரசு சாலை போக்குவரத்துக்கழக உதவி மேலாளர்கள் புஷ்பராஜ், சிவானந்தம், குழந்தைவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த பஸ் புதுவையில் இருந்து காரைக்காலுக்கு தினமும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. காரைக்காலில் இருந்து பகல் 12.30 மணிக்கு பஸ் புறப்பட்டு புதுச்சேரிக்கு வரும். தற்போது புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதால் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு எங்கும் நிற்காத வகையில் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. காரைக் காலில் இதனை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் பன்வால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Story