மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறப்புவிதை நெல் வாங்குவதில் விவசாயிகள் தீவிரம் + "||" + Mettur Dam opens on June 12 Farmers are serious about buying seed paddy

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறப்புவிதை நெல் வாங்குவதில் விவசாயிகள் தீவிரம்

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறப்புவிதை நெல் வாங்குவதில் விவசாயிகள் தீவிரம்
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவதையொட்டி விதை நெல் வாங்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,

மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவதையொட்டி விதை நெல் வாங்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேட்டூர் அணை

காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

அதன் பின்னர் போதிய மழை இல்லாததாலும், அணை நிரம்பாததாலும் காலந்தாழ்த்தியே திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். காவிரி டெல்டா பாசனத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் கடந்த கால வரலாற்றில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது இது 16-வது முறையாகும்.

விதை நெல்

குறுவை சாகுபடியை விவசாயிகள் மறந்து போய்விட்ட நிலையில் அரசின் அறிவிப்பால் உற்சாகமடைந்த விவசாயிகள் குறுவை நெல் விதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறுவைக்கு ஏற்ற ரகமான ஆடுதுறை 36 ரக நெல் விதையை தனியார் வியாபாரிகளிடம் மூட்டை ஒன்றுக்கு (30கிலோ) ரூ.1,150- க்கு வாங்கி வருகின்றனர்.

வேளாண்மை துறை விவசாயிகளுக்கு விதைநெல் வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் திருக்காட்டுப்பள்ளி பகுதி விவசாயிகள் குறுவை விதை நெல்லை தனியார் வியாபாரிகளிடம் வாங்கி வருகின்றனர். எனவே குறுவை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு கூடுதலான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை சாகுபடி நிறைவு

இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் ஆழ்துளை கிணற்று தண்ணீரை கொண்டு நடைபெற்று வந்த கோடை நெல் சாகுபடி பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெற்பயிரில் தற்போது இரண்டாம் கட்ட களை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இந்த ஆண்டு 3,130 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை நெல் சாகுபடி செய்துள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை மழை அவ்வப்போது பெய்துவரும் நிலையில் இந்த பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர் நல்ல நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி உளுந்து மற்றும் எள் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை சாகுபடியாக செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள் ஆகிய பயிர்கள் நல்ல நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லணைக்கால்வாய் பாசன பகுதி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லணைக்கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

மேட்டூர் அணை குறிப்பட்ட காலத்தில் திறக்கப்பட்டாலும் கல்லணைக்கால்வாயில் கடைசி வரை பாசன நீர் சென்றடைய 2 மாதங்களுக்கு மேலாகும். இந்த கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

யானைப்பசி

இருப்பினும் தற்போது கல்லணைக்கால்வாய் தூர்வாரும் பணிக்காக ரூ.7 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஆறில் ஒரு பங்கு கூட இல்லை. இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றதாகும் என விவசாயிகள் கூறுகிறார்கள். 1,205 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன கிளை வாய்க் கால்கள் மட்டுமே தூர்வாரப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள ஏரி, குளங்கள் மூலம் தான் பெரும்பாலான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. ஏரி, குளங்கள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வாய்க் கால்கள் தூர்வாரும் பணியோடு கல்லணைக் கால்வாய் பாசன பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி நீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கல்லணை திறந்தவுடன் கல்லணைக்கால்வாயின் கடைமடை பகுதி வரை பாசனநீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.