தமிழகத்தில் இருந்து புதுவைக்கு கடல் வழியாக மதுபானங்கள் கடத்தலா?
தமிழகத்தில் இருந்து புதுவைக்கு கடல் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரியாங்குப்பம்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின் படி புதுவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீட்டில் இருக்க உத்தரவிடப்பட்டது. மதுக்கடைகள் மூடப்பட்டன. பஸ், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன. தியேட்டர்கள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன.
அடுத்தடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது இரவு 7 மணி வரை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ளூர் அளவில் சமூக இடைவெளியை கடைபிடித்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் வரும் 31-ந்தேதி வரை 4-ம் கட்டமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவையில் அமைச்சரவை கூடி மதுக்கடைகளை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மதுக்கடைகள் திறப்பு தள்ளிப்போகிறது.
ஆனால் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அங்கிருந்து புதுவைக்கு மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் புதுவை மாநில எல்லைப்பகுதிகளில் போலீசார் மதுக்கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடல் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினார்கள். அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கடல் வழியாக மதுகடத்தல் பற்றி தகவல் தெரியவந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story