திருவாரூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ‘பார்மலின்’ கலந்த மீன்கள் பறிமுதல்


திருவாரூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ‘பார்மலின்’ கலந்த மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2020 4:51 AM IST (Updated: 22 May 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ‘பார்மலின்’ கலந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர், 

திருவாரூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ‘பார்மலின்’ கலந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரசாயனம்

திருவாரூர் நகரில் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார், மீன் வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், மீன்வளத்துறை ஆய்வாளர் சந்திரமணி, உதவி ஆய்வாளர் தினேஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் மூலமாக ஆய்வு நடந்தது.

பறிமுதல்

வாழவாய்க்கால் ரவுண்டா அருகில் உள்ள மீன் கடைகள், திருவாரூர் அண்ணா சதுக்கம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு நடைபெற்றது. அப்போது பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து ரசாயனம் கலந்த 12 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் ரசாயனம் மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்ததால் அபாரதம் விதிப்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வியாபாரிகள் உள்பட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story