புதுவை-கடலூர் எல்லையில் போலி பாஸ்களுடன் வந்த வாகனங்கள்


புதுவை-கடலூர் எல்லையில் போலி பாஸ்களுடன் வந்த வாகனங்கள்
x
தினத்தந்தி 22 May 2020 4:59 AM IST (Updated: 22 May 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவை-கடலூர் எல்லையில் போலி பாஸ்களை பயன்படுத்தி வாகனங்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அந்த வாகனங்களை திருப்பி அனுப்பினார்.

பாகூர், 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுவை மாநில எல்லைகளை மூடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதையும் மீறி சிலர் திருட்டுத் தனமாக வந்து செல்கின்றனர்.

தேவையில்லாமல் தமிழக பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வர வேண்டாம். அனுமதி ரசீது வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கொண்ட குழுவினர் நேற்று மதியம் புதுச்சேரி-கடலூர் எல்லையான முள்ளோடை பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தினமும் புதுவைக்குள் நுழையும் வாகனங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு செய்தார்.

கடலூரில் இருந்து லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி மறைத்துக்கொண்டு வருகிறார்களா? என்றும் அவர் சோதனை நடத்தினார். அத்தியாவசியமின்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பி அனுப்பினார். போலியாக கோவிட் பாஸ் ஒட்டிக்கொண்டு வந்த வாகனங்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

புதுச்சேரிக்குள் நுழைய பாஸ் இல்லாதவர்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டாம் என்று எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், சுப்ரமணியன், சரவணன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

Next Story