புதுவையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 9 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது காரைக்காலில் ஒருவரும், மாகியில் 2 பேரும், கண்ணூரில் விமான நிலைய ஊழியர் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினர். விழுப்புரத்தை சேர்ந்த மீதமுள்ள 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் குருமாம்பேட் பகுதியை சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஒருவரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மார்க்கெட்டுக்கு சென்று வந்ததால் ஏற்பட்ட தொடர்பில் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அவருடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து குருமாம்பேட் பகுதி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி மகாவீர் நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள் 3 பேர் நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்தனர். இதையொட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 3 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்புக்காக 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
15 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் புதுவை ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறும்.
Related Tags :
Next Story