முன்விரோதத்தால் தகராறு: ஊராட்சி செயலாளருக்கு அரிவாள் வெட்டு ஊராட்சி மன்ற தலைவர் கைது


முன்விரோதத்தால் தகராறு: ஊராட்சி செயலாளருக்கு அரிவாள் வெட்டு ஊராட்சி மன்ற தலைவர் கைது
x
தினத்தந்தி 22 May 2020 5:40 AM IST (Updated: 22 May 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி செயலாளரை அரிவாளால் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி, 

சீர்காழி அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி செயலாளரை அரிவாளால் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி செயலாளருக்கு அரிவாள் வெட்டு

சீர்காழி அருகே மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48). இவர், ஆதமங்கலம் ஊராட்சி செயலாளராக உள்ளார். மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (36). இவர், மருதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர், அவரது சகோதரர் நேதாஜி உள்பட 3 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அந்த பகுதி வழியாக சென்ற ராமச்சந்திரனை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டினர்.

ஊராட்சி மன்ற தலைவர் கைது

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளரை அரிவாளால் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டரை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக தலைமறைவான அவரது சகோதரர் நேதாஜி உள்ளிட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story