‘ஓசி’யில் மதுபாட்டில் தராத டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் - கூலித்தொழிலாளி கைது
‘ஓசி’யில் மதுபாட்டில் தராத டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை காரை காட்டன் பஜார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் 18-ந்தேதி ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையில், மேற்பார்வையாளர் பட்டாபிராமன் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அவரிடம், வெங்கட் ஓசியில் பிராந்தி பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு மேற்பார்வையாளர், வெங்கட்டிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பணம் தர முடியாது, ஓசியில் மதுபாட்டில் தரா விட்டால் மறுநாள் கடையைத் திறக்க நீ உயிரோடு இருக்க மாட்டாய் என மிரட்டல் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் காரை கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பட்டாபிராமனை, வெங்கட் வழிமறித்து எனக்கு மதுபாட்டில் தர மறுக்கிறாய், நான் யார் தெரியுமா? எனக் கேட்டு, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்துக் காட்டி மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் ராணிப்பேட்டை போலீசில் வெங்கட் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கூலித்தொழிலாளி வெங்கட் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story