வைரஸ் பாதிப்பு 25,500 ஆக உயர்வு: மும்பையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெறும் 5 ஆஸ்பத்திரிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்


வைரஸ் பாதிப்பு 25,500 ஆக உயர்வு: மும்பையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெறும் 5 ஆஸ்பத்திரிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 22 May 2020 12:20 AM GMT (Updated: 22 May 2020 12:20 AM GMT)

மும்பையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெறும் 5 ஆஸ்பத்திரிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் வைரஸ் நோய் காட்டு தீயாக பரவி வருகிறது.

மும்பையை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 1,382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல நேற்று மேலும் 41 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் நகரில் நோய் பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 882 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் 4 நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்றும் மாநிலத்தில் 2 ஆயிரத்து 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மராட்டியத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் தற்போது 41 ஆயிரத்து 642 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 64 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் இங்கு நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,454 ஆக அதிகரித்து உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று மாநிலத்தில் 1,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாநிலத்தில் 11 ஆயிரத்து 726 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

மாநிலம் முழுவதும் முக்கிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 2,048 (33 பேர் பலி), தானே புறநகர் - 338 (4 பேர் பலி), நவிமும்பை மாநகராட்சி - 1,668 (29 பேர் பலி), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 641 (6 பேர் பலி), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 131 (2 பேர் பலி), பிவண்டி மாநகராட்சி - 80 (3 பேர் பலி), மிரா பயந்தர் - 362 (4 பேர் பலி), வசாய் விரார் மாநகராட்சி - 425 (11 பேர் பலி), ராய்காட் - 285 (5 பேர் பலி), பன்வெல் மாநகராட்சி - 271 (11 பேர் பலி). மாலேகாவ் மாநகராட்சி - 710 (43 பேர் பலி). புனே மாநகராட்சி - 4,207 (222 போ் பலி), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 203 (7 பேர் பலி), சோலாப்பூர் மாநகராட்சி - 512 (27 பேர் பலி), அவுரங்காபாத் - 1,105 (39 பேர் பலி), நாக்பூர் மாநகராட்சி - 434 (6 பேர் பலி).

இந்தநிலையில் மராட்டிய அரசு மும்பையில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ள சயான், கே.இ.எம்., நாயர், ஜி.டி. ஆஸ்பத்திரி, ஜே.ஜே. ஆஸ்பத்திரி ஆகிய 5 ஆஸ்பத்திரிகளுக்கு சிறப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது. அதன்படி நாயர் ஆஸ்பத்திரிக்கு மதன் நகர்கோஜே, கே.இ.எம். ஆஸ்பத்திரிக்கு அஜித் பாட்டீல், சயான் ஆஸ்பத்திரிக்கு பாலாஜி மஞ்சுலே ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல ஜி.டி. மற்றும் ஜே.ஜே. ஆஸ்பத்திரிகளுக்கு சுசில் கோர்டுவேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள இந்த 5 ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இனிமேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரி விவகாரங்களை கவனித்து கொள்வார்கள். நோய் கட்டுப்பாட்டு பணியை நேரடியாக கண்காணிப்பார்கள். குறிப்பாக நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்தல், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க செய்வது, மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வைப்பது இவர்களின் முக்கிய பணியாக இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story