காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு


காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 May 2020 12:51 AM GMT (Updated: 22 May 2020 12:51 AM GMT)

காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

காஞ்சீபுரத்தில் இருந்து குமரிக்கு வந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 51 ஆக இருந்தது. முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தார்.

நேற்றுமுன்தினம் மயிலாடி அருகே உள்ள ராஜாவூரில் உடல்நலக்குறைவால் ஒரு பெண் மரணம் அடைந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 பேர் வேன் மூலம் குமரி மாவட்டம் வந்தனர். அந்த வேனில் 14 வயது சிறுவனும் இருந்தான். ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிக்கு வந்தபோது வேனில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

சிறுவனுக்கு தொற்று

எனவே அந்த சிறுவனை மட்டும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகில் உள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். வேனில் வந்த மற்ற அனைவரும் துக்க வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் காஞ்சீபுரத்துக்கு அவர்கள் அதே வேனில் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி பகுதி கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சிறுவனை உறவினர்கள் நைசாக தங்களுடைய வேனில் அழைத்துச் சென்று விட்டனர்.

இதற்கிடையே சிறுவனுக்கு பரிசோதனை முடிவு வந்தது. அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சோதனைச்சாவடியில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திய முகாமில் சென்று சிறுவனை தேடிய போது காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவன் வைத்திருந்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தபோது காஞ்சீபுரம் அருகில் சென்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பரபரப்பு

இதையடுத்து குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த சிறுவனை பிடித்து சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுக்கு தொற்று இருந்ததால், அவனை அழைத்துச் சென்ற அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Next Story