குமரியில் மேலும் 3 இடங்களில் விதிக்கப்பட்ட தடை அகற்றம் கலெக்டர் நடவடிக்கை
குமரியில் மேலும் 3 இடங்களில் விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.
தென்தாமரைகுளம்,
குமரியில் மேலும் 3 இடங்களில் விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட பகுதி
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு நோயாளிகள் தங்கியிருந்த இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்‘ வைக்கப்பட்டது. தற்போது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை கல்லூரிகள் மற்றும் தனியார் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கிறார்கள். ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இதனால் புதிதாக தடை செய்யப்பட்ட பகுதிகள் உருவாகவில்லை.
தடை விதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பினாலும் 14 நாட்கள் வரை யாருக்கும் அங்கு கொரோனா தொற்று ஏற்படாத பட்சத்தில், அப்பகுதியில் விதிக்கப்பட்ட தடையை அகற்றி விடலாம் என்பது முன்பிருந்த நடைமுறை. இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
திடீர் போராட்டம்
அதாவது, கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியதும் அவருடைய வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தினால் போதும் என்று தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய வெட்டூர்ணிமடம் கேசவ திருப்பாபுரம் சந்தோஷ்நகர் பகுதியிலும், தென்தாமரைகுளம் பகுதியிலும் விதிக்கப்பட்டு இருந்த தடைகள் அகற்றப்படாமல் இருந்தன.
இதனால் சந்தோஷ்நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்று கோரி நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தென்தாமரைகுளம் பகுதி மக்களும் தங்களுடைய பகுதியில் உள்ள தடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அகற்றம்
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, நாகர்கோவில் சந்தோஷ்நகர், தளவாய்புரம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைகளையும், தென்தாமரைகுளம் பகுதியில் உள்ள தடையையும் அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நேற்று இந்த 3 இடங்களிலும் அமைக்கப்பட்டு இருந்த தடைகளும் அகற்றப்பட்டன. தடை அகற்றப்பட்ட தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொரோனா பாதிப்பு நோயாளி இன்னும் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் 2 இடங்களில் விதிக்கப்பட்டிருந்த தடை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நகர்நல அதிகாரி கின்சால் ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டன. அப்போது, கொரோனா பாதிப்பு நோயாளிகளின் குடும்பத்தினரும், அருகில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்தவர்களும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும், இந்த பகுதிகளில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் மீண்டும் இந்த பகுதி குறிப்பிட்ட நாட்கள் வரை சீல் வைக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.
தென்தாமரைகுளம்
இதேபோல் தென்தாமரைகுளத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோட்டாட்சியர் மயில் கிராம நிர்வாக அதிகாரி ஜெயகவிதா, தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தென்தாமரைகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா ஆகியோர் வந்தனர். அவர்கள் முன்னிலையில் பேரூராட்சி அலுவலர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லும் ஏழு இடங்களில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றினர். மேலும் மாணவியின் வீட்டின் அருகில் உள்ள நான்கு வீட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் மேலும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா சம்பந்தமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் மீன் சந்தை ஆகியவை இன்னும் 28 நாட்களுக்கு பிறகு பழைய இடத்தில் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 14 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த இடங்கள் நேற்று காலை திறந்து விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குமரியில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் தடைகள் அகற்றப்பட்டதால், 6 ஆக இருந்த தடை செய்யப்பட்ட பகுதி தற்போது 3 ஆக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story