சமூக இடைவெளிக்காக 30 கடைகளுடன் தோவாளை பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வியாபாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு


சமூக இடைவெளிக்காக 30 கடைகளுடன் தோவாளை பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வியாபாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 22 May 2020 2:21 AM GMT (Updated: 22 May 2020 2:21 AM GMT)

30 கடைகளுடன் தோவாளை பூ மார்க்கெட் செயல்படலாம் என கோட்டாட்சியர் மயில், வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி,

30 கடைகளுடன் தோவாளை பூ மார்க்கெட் செயல்படலாம் என கோட்டாட்சியர் மயில், வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பூ மார்க்கெட்

தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டை சமூக இடைவெளியுடன் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக கோட்டாட்சியர் மயில் கடந்த 2 நாட்களாக தோவாளை பூ மார்க்கெட்டை ஆய்வு செய்தார். மேலும் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று கோட்டாட்சியர் மயில் தலைமையில் பூ வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தோவாளை மார்க்கெட்டில் நடந்தது. தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், பூ வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், வேளாண்மை விற்பனை குழு செயலாளர் விஷ்ணப்பன், தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி, கிருஷ்ணன்புதூர் ஊர் தலைவர் சொக்கலிங்கம், வருவாய் ஆய்வாளர் பழனிவேல் ராஜன், வார்டு உறுப்பினர் ஆறுமுகம் பிள்ளை மற்றும் பூ வியாபாரிகள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

30 கடைகள் திறக்கலாம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் 20 கடைகள் மட்டும் திறக்க ஆலோசித்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பூ வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருக்கும் போது 20 கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தால் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறினர். மேலும், தீவிர ஆலோசனைக்கு பின் வியாபாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதில், மார்க்கெட்டுக்கு வெளியே விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் போக மீதம் உள்ளவர்கள் மார்க்கெட்டில் கடை திறக்கலாம். அதாவது, வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 30 கடைகள் நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் கடைகளை நடத்துவதற்கான அடையாளம் போடப்பட்டது.

கலெக்டர் இறுதி முடிவு

மேலும் இதுதொடர்பாக கோட்டாட்சியர் மயில் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சமூக இடைவெளியுடன் 20 கடைகள் திறக்கத்தான் ஆலோசித்தது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருக்கிறார்கள். அதில் சில வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வெளியே வியாபாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் 30 கடைகளுக்கு அடையாளம் போட்டுள்ளோம். இது எந்த அளவில் சாத்தியமாகும் என்பதை மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசித்து விட்டு பின்னர் அறிவிப்போம். அதன் பின்னர் தான் பூ மார்க்கெட் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story