சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும்; கலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு
ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது யாகூப், துணைத்தலைவர் சுல்தான் ரியாஸ்தீன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் பண்டிகை வருகிற 25 அல்லது 26-ந் தேதி பிறை தெரியும் பட்சத்தில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதே சமயம் ரம்ஜான் பண்டிகை 25-ந் தேதி அமைந்தால் அன்றைய தினம் சேலம் மாநகர் பகுதியில் இறைச்சிக்கடைகள் செயல்பட சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். அதேசமயம் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்துவதற்கு ஒரு மைதானத்தை ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்க வேண்டும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த இடத்தில் அனுமதி வழங்கப்படுகிறதோ, அங்கு முஸ்லிம்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகை நடத்துவோம் என தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில் அரசின் வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் நாங்கள் முறையாக கடைபிடிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர் மாவட்ட தலைவர் முகமது யாகூப் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் எங்களது ஈத் பெருநாளாக கருதப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி 10 நிமிடம் சிறப்பு தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கேட்டு மனு கொடுக்க வந்துள்ளோம், என்றார்.
Related Tags :
Next Story