வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு 32 ஆயிரம் பேர் வந்துள்ளனர்
வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு 32 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு 32 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
டெல்லி, புனே
தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி நெல்லை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் பணிபுரிந்து வந்த பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த 12-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,330 தொழிலாளர்கள், 13-ந்தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,426 பேர், 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 1,437 தொழிலாளர்கள் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 16-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 326 பேர் தூத்துக்குடி ரெயில் நிலையம் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதவிர டெல்லியில் இருந்து 18-ந்தேதி தென் மாவட்டங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட 398 பேர் சிறப்பு ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தனர். 19-ந்தேதி மராட்டிய மாநிலம் புனே நகரில் இருந்து 419 பேர் ரெயிலில் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு வந்தவர்களில் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
32 ஆயிரம் பேர்
இதுதவிர மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டத்துக்கு 32 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு அரசு அறிவிப்பின்படி கபசுர குடிநீர், கசாயப்பொடி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அவசர கால உதவி மையத்தில் இருந்து தினமும் சம்பந்தப்பட்ட நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது உடல் நிலை குறித்தும் விசாரணை செய்து அறிக்கை அளிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story