வி.கூட்டுரோடு சோதனைச்சாவடியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
வி.கூட்டுரோடு சோதனைச்சாவடியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் களில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 45 பேர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், தச்சூர், குமாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களை கண்டறிவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டு, மடப்பட்டு, வி.கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது, மராட்டியம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வி.கூட்டுரோட்டில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் வந்துள்ளனர் என அங்குள்ள வருவாய் துறையினரும் கேட்டறிந்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து வாசுதேவனூரில் உள்ள தனியார் கல்லூரி மையத்தை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார். அங்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர்?, அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா? சமூக இடைவெளி கடை பிடிக்கப்படுகிறதா? என அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சின்னசேலம் தாசில்தார் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, சுமதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர் .
Related Tags :
Next Story