ரூ.15 ஆயிரம் நிவாரணம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் திடீர் முற்றுகை
கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கொரோனா பரவலை தடுக்க 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்டோக்கள் ஓட அனுமதி கிடைக்கவில்லை. இதையொட்டி ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கக்கோரி டிரைவர்கள் தொடர்ந்து நெல்லை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கொக்கிரகுளம் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து மனித சங்கிலி போல் நின்றனர்.
ரூ.15 ஆயிரம் நிவாரணம்
அப்போது அவர்கள், ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தங்களது குடும்பத்தை நடத்த வழியில்லாமல் இருக்கிறார்கள். நலவாரியத்தில் பதிவுசெய்த 10 சதவீத தொழிலாளர்களுக்கு மட்டும் அரசின் நிவாரணம் ரூ.1000 கிடைத்துள்ளது.
இதுதவிர வாரியத்தில் பதிவு செய்யாமல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளர்கள் 90 சதவீதம் பேருக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே, ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கும் தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், சமூக இடைவெளியில் ஆட்டோக்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
தென்காசியில் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் அற்புத ஜெகன் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் கணபதி, லெனின்குமார், வட்டார செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியில் நின்று, ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் போட்டு சென்றனர்.
Related Tags :
Next Story