ஊரடங்கு நாட்களை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி திருச்சி சரக காவல்துறை சார்பில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி நடத்தப்பட்டது.
திருச்சி,
கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது? என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி திருச்சி சரக காவல்துறை சார்பில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி நடத்தப்பட்டது.
இதில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 11-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த பேச்சு போட்டியில் திருச்சி மாவட்டத்தில் முசிறி, லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர், ஜீயபுரம் ஆகிய உட்கோட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய நடுவர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஜூனியர் பிரிவில் மாணவ-மாணவிகள் தீபிகா, பவித்ரா, வைத்தீஸ்வரன், அக்ஷயா ஆகியோரும், சீனியர் பிரிவில் பிரவீன், சபாசல்சபில், சீத்தல், சுப்புலெட்சுமி ஆகியோரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story