சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை மாநகராட்சி 10-வது வார்டு ஆரப்பாளையம் சோனைகோவில் தோப்பு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கலங்கலாக நிறம் மாறி வருவதாகவும், அதில் அதிக அளவில் தூசி படிந்து வருவதாகவும் அந்த பகுதியினர் கூறினர். இதுதொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் தண்ணீர் மாசு படிந்து வருவதை கண்டித்தும், சுகாதார முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரியும் பொன்னகரம் பிராட்வே பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டனர்.
லாரிகள் மூலம்...
அப்போது குடிநீர் மாசடைந்து வருவதாகவும், இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் குடிநீர் சுகாதாரமாக வினியோகம் செய்யும் வரை லாரிகள் மூலமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி குழு செயலாளர் ஸ்டாலின் கூறும்போது, கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் மாசு படிந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய பகுதி என்பதால் இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பிரிவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குடிநீரை வந்து ஆய்வு செய்துவிட்டு குடிநீர் மாசு கலந்து வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
Related Tags :
Next Story