சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் பெரிய ஜவுளி வர்த்தகர்கள் கோரிக்கை
சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெரிய ஜவுளி வர்த்தகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி,
சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெரிய ஜவுளி வர்த்தகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவிர, அனைத்து வகையான பெரிய, சிறிய கடைகளும் மூடப்பட்டன. இதனால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
குறிப்பாக, பெரிய ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மேலும், அங்கு பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஊழியர்கள் பணியாற்றாமலேயே அவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் 3 வேளை உணவினை பெரிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பிலேயே இடவசதி செய்து கொடுத்து தங்க வைத்துள்ளனர். இதன் காரணமாகவும் பெரிய நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
பெரிய நிறுவனங்கள் மூடல்
பொதுவாக பண்டிகை காலங்களில் தான் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருச்சியில் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, மெயின்கார்டுகேட் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய, பெரிய ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சை, பெரம்பலூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க வருவார்கள். தற்போது கொரோனா தாக்கத்தால் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பண்டிகைக்கு வாங்கப்பட்ட ஜவுளிகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த ஜவுளிகளுக்கான பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் பெரிய நிறுவனங்கள் தவித்து வருகின்றன. அதேநேரம் குளிர்சாதன வசதியற்ற கடைகளை திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சிறு, சிறு ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ரம்ஜான் பண்டிகை நெருங்கி விட்டதால் வழக்கத்தைவிட அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வரும் காலங்களில் மிகவும் சிரமம்
இதுகுறித்து பெரிய ஜவுளி கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, “தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் அதிகமான வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவார்கள். அவர்கள் தேவைக்கேற்ப புது, புது வகையான ஜவுளிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 2 மாதமாக கடை திறக்கப்படாததால் வாங்கப்பட்ட ஜவுளிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு உணவு, தங்குமிடம் செய்து கொடுக்க வேண்டி உள்ளது. இதேநிலை நீடித்தால் வரும் காலங்களில் மிகவும் சிரமம் ஏற்பட்டு விடும். ஆகவே குளிர் சாதன வசதியில்லாமல் அரசு விதிக்கும் நிபந்தனைகளுடன் கடையை திறந்து, வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வைத்து வியாபாரம் செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story