ஊரடங்கு விதிகள் தளர்வு: ஈரோடு கனி மார்க்கெட் சிறு ஜவுளிக்கடைகள் திறப்பு
ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு கனிமார்க்கெட்டில் சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் கடந்த 18-ந் தேதி தளர்வு செய்யப்பட்டது. ஆனாலும், மாநகராட்சி பகுதியில் உள்ள சிறு ஜவுளிக்கடைகள், கனி மார்க்கெட் ஜவுளி சந்தை உள்ளிட்டவை திறக்கப்படாமல் இருந்தது.
இந்த கடைகளை திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஜவுளிக்கடைகள் திறப்பதற்கான விதிகளை சற்று தளர்வு செய்து கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் இடைவெளி விட்டு அமைக்கவும், கை கழுவுதல், இடைவெளி கடைபிடித்தல் ஆகிய நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி வியாபாரிகள் இடைவெளி கடைபிடித்து நேற்று துணிகள் விற்பனை செய்தனர்.
இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள சிறு ஜவுளிக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கடைகளில் ஏ.சி. வசதி இருந்தால் அதை யாரும் இயக்கவில்லை. கடையில் ஏ.சி.செயல்படாது என்று அறிவிப்பினை கடையின் முன்பு ஒட்டி வைத்து இருந்தனர்.
Related Tags :
Next Story