ஊரடங்கு காலத்தில் சரக்கு இருப்பு குறைவு புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.1 கோடி அபராதம்
ஊரடங்கு காலத்தில் சரக்கு இருப்பு குறைந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கறம்பக்குடி,
ஊரடங்கு காலத்தில் சரக்கு இருப்பு குறைந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சரக்கு இருப்பு குறைவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மார்ச் மாதம் 24-ந்தேதி கொரோனா ஊரடங்கால் மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டன. அப்போது ஒவ்வொரு கடையிலும் அன்றைய விற்பனை தொகை மற்றும் ‘குளோசிங் ஸ்டாக்‘ (சரக்கு இருப்பு) மதிப்பு போன்றவற்றை டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு தொடர்ந்ததால் கடைகளை உடைத்து யாரும் திருடாத வகையில் 70 கடைகளில் இருந்த மதுபானங்களை டாஸ்மாக் குடோனிற்கும், திருமண மண்டபங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மதுபானங்களின் மதிப்பிற்கும், அந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் கொடுத்த சரக்கு இருப்பு மதிப்பிற்கும் சுமார் ரூ.2½ கோடி குறைவாக இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளரின் அறிவுறுத்தல்படி அந்த தொகையை டாஸ்மாக் ஊழியர்கள் வங்கியில் செலுத்தி விட்டனர். மேலும் நிர்வாகம் கூறியப்படி 4¼ சதவீதம் அபராதம் செலுத்தினர்.
ரூ.1¼ கோடி அபராதம்
இவ்வேளையில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு கடைக்கும் சரக்கு இருப்பு குறைந்த தொகைக்கு 50 சதவீதம் அபராதம், 24 சதவீத வட்டி, 18 சதவீத ஜி.எஸ்.டி. என 70 கடைகளுக்கும் சுமார் ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், அரசியல் நிர்பந்தத்தாலும், மிரட்டல்களாலும் கள்ள சந்தையில் விற்க மதுபானங்களை கொடுக்க வேண்டிய நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறோம்.
யாரோ சம்பாதித்ததற்கு ஏற்கனவே நாங்கள் அபராதம் செலுத்திய நிலையில், தற்போது மீண்டும் 70 சதவீதம் அபராதம் என்பது தாங்க முடியாது. யார் தவறு செய்தவர்கள் என்பது அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் நன்கு தெரியும். ஆனால் நாங்கள் பலிகடா ஆக்கப்பட்டோம் என வருத்தத்துடன் கூறினர்.
Related Tags :
Next Story