இளையான்குடியில் நிவாரணமாக வழங்காமல் பதுக்கிய 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் கலெக்டர் நடவடிக்கை


இளையான்குடியில்  நிவாரணமாக வழங்காமல் பதுக்கிய 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்  கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 May 2020 6:10 AM GMT (Updated: 22 May 2020 6:10 AM GMT)

மக்களுக்கு நிவாரணமாக வழங்காமல் பதுக்கிய 4¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டார்.

சிவகங்கை,

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் அரிசியுடன் கூடுதலாக நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரசின் உத்தரவின்படி அரிசி வழங்காமல் அந்த அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இளையான்குடி புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக இளையான்குடி தாசில்தார் ரமேசுக்கு தெரிவித்து அங்கு சென்று உடனடியாக சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார். அதன்படி தாசில்தார் ரமேஷ், வினியோக அதிகாரி முபாரக்உசேன், வருவாய் ஆய்வாளர் நாகநந்தினி மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்திய போது அங்கு 4¾ டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

பறிமுதல்

மேலும் இந்த ரேஷன் அரிசி மூடைகளை அங்குள்ள வாணிப கழக கிட்டங்கியில் லோடு மேனாக பணியாற்றி வரும் பாண்டி என்பவர் அங்கு பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மூடைகளை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

அரசு வழங்கும் நிவாரண பொருட்களை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தவறாமல் வினியோகிக்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் தவறு செய்யும் கடைக்காரர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வறு அவர் கூறினார்.

நிவாரணமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரிசியை பதுக்கியது தொடர்பாக வினியோக அதிகாரி முபாரக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story