வேப்பந்தட்டை பகுதியில் எள் அறுவடை பணி தீவிரம் விலை குறைவால் விவசாயிகள் வேதனை
வேப்பந்தட்டை பகுதியில் எள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் எள் விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
வேப்பந்தட்டை பகுதியில் எள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் எள் விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எள் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் மானாவாரி சாகுபடிக்காக மக்காச்சோளம் மற்றும் பருத்தி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மானாவாரி மற்றும் கிணற்று பாசனம் மூலம் அதிக அளவில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எள் சாகுபடி அதிகரித்துள்ளது.
இந்த பகுதியில் மட்டும் 538 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது தீவிரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்டுள்ள எள்ளை கொரோனா ஊரடங்கால் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. தற்போது பொதுமக்கள் சமையலுக்கு அதிக அளவில் கடலை மற்றும் எள் எண்ணெய்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் வேதனை
இதனால் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால் நல்லெண்ணை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் நல்லெண்ணெய்க்கு தேவையான எள்ளினை விவசாயிகளிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு அதாவது கிலோ ரூ.80-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு கிலோ எள் ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த எள்ளினை இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாததால் ஒவ்வொரு பகுதியிலும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story