சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது மிகவும் அவசியமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகிறவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கு, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்படுகிறது.
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று சினிமா படப்பிடிப்பு தொடங்குவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் ஆலோசிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இங்குள்ள சூழ்நிலை, தொற்று பாதிப்பு, ஊரடங்கு மற்றும் அனுமதி வழங்கினால் எத்தனை பேரை பணியாற்ற அனுமதிப்பது? குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் முடிவு செய்யப்படும்.
திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் முடிவு செய்வார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் குடிமராமத்து பணிகள் மூலமாக தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Related Tags :
Next Story