நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் ரெயில் சேவை தொடங்கியது


நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் ரெயில் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 22 May 2020 9:45 PM GMT (Updated: 22 May 2020 8:21 PM GMT)

நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் ரெயில் சேவை தொடங்கியது

மைசூரு,

நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் ரெயில் சேவை தொடங்கியது. நேற்று பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-பெலகாவி இடையே ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு ‘பார்சல்’ சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும்போது பல்வேறு கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டன. அப்போது, முதல்-மந்திரி எடியூரப்பா கர்நாடகத்தில் ரெயில் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்திருந்தார். இதனால், கர்நாடகத்தில் மே மாதம் 22-ந்தேதி (அதாவது நேற்று) ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

அதாவது முதற்கட்டமாக பெங்களூரு-மைசூரு (வண்டி எண்: 06503/06504), பெங்களூரு-பெலகாவி (02059/02060) இடையே இருமார்க்கமாக ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி, நீண்ட நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று ரெயில் சேவை தொடங்கியது. பெங்களூரு-பெலகாவி (02059) எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலை, துப்புரவு ஊழியர் முனியம்மாள், ஊழியர் நபி அகமது ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ரெயில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது.

மறுமார்க்கமாக பெலகாவி-பெங்களூரு (02060) எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது. பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ரெயிலில் பயணம் செய்ய வந்த பயணிகள், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டனர். மேலும் தீவிர பரிசோதனைக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக விலகல் கடைப்பிடிக்கும்படியும், முக கவசம் அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த ரெயில், யஷ்வந்தபுரம், துமகூரு, அரிசிகெரே, பீரூர், சிக்கஜாஜூர், தாவணகெரே, ஹரிகரா, ராணிபென்னூர், ஹாவேரி, உப்பள்ளி, தார்வார் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன.

இதேபோல, பெங்களூரு-மைசூரு (06503) எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 9.20 மணிக்கு 37 பயணிகளுடன் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றது. மதியம் 2.15 மணிக்கு அந்த ரெயில் 63 பயணிகளுடன் மைசூருவை சென்றடைந்தது. பின்னர் மறுமார்க்கமாக மைசூரு-பெங்களூரு (06504) எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 1.45 மணிக்கு 57 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் புஷ்பா, ரிஸ்வானா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இந்த ரெயில் இயங்குகிறது. இந்த ரெயில், கெங்கேரி, ராமநகர், மத்தூர், மண்டியா, பாண்டவபுரா, நாகனஹள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கர்நாடகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளது. ஆனாலும் முதல் நாளில் பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

Next Story