கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்


கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2020 10:45 PM GMT (Updated: 22 May 2020 8:56 PM GMT)

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி மாநில தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நேரில் வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநில தேர்தல் ஆணையாளரை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்ககுமார் தலைமையில் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் அடங்கிய குழுவினர் பெங்களூரில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு கடிதத்தை கொடுத்தனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தின்படி வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கிராம பஞ்சாயத்து முதல் கூட்டம் நடத்தும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கிறது. அதன்படி 6,024 கிராம பஞ்சாயத்துகளின் உறுப்பினர் பதவிக்கு கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அவர்களின் பதவி காலம் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிறைவடைகிறது.

ஆனால் அந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முன்னேற்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தாமல் ஒத்திவைப்பது என்பது அதிகார பரவலை தடுப்பது மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை சீர்குலைப்பதாக உள்ளது. கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என்று மூன்று நிலையாக பிரிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படுகிறது. கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 3 நிலையாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.

இத்தகைய ஜனநாயக விருப்பங்களுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவது சரியல்ல. தேர்தல் தேதி மற்றும் இட ஒதுக்கீடு பட்டியலை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. தற்போது பதவியில் உள்ளவர்களின் பதவி காலம் நிறைவடையும் முன்பே, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம், கிராம சுவராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை திட்டமிட்டு மீறுகிறது. சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்துகளுக்கு திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமை ஆகும். ஆனால் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொள்வதில் மாநில தேர்தல் ஆணையம் முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் மவுனமாக இருக்கிறது. இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

மேலும் கர்நாடக அரசு, மாவட்ட கலெக்டர்கள் மூலம் ஆளுங்கட்சியினரை நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ளது. அதனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடு, ஜனநாயகத்தின் மாண்புகளை சீர்குலைப்பதாக உள்ளது. மாவட்ட கலெக்டர்கள், ஆளுங்கட்சி கூறுவது போல் செயல்படக் கூடாது. சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படி செயல்பட வேண்டும்.

கர்நாடக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மாநில தேர்தல் ஆணையம், கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையம், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒருதலைபட்சமாக செயல்படாமல், ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story