கர்நாடகத்தில் பி.எட். படித்த என்ஜினீயர்களை ஆசிரியராக நியமிக்க முடிவு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகத்தில் பி.எட். படித்த என்ஜினீயர்களை ஆசிரியராக நியமிக்க முடிவு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 23 May 2020 4:30 AM IST (Updated: 23 May 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பி.எட். படித்த என்ஜினீயர்களை ஆசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க பி.எட். படித்துள்ள என்ஜினீயர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். ராய்ச்சூர் மற்றும் யாதகிரி மாவட்டங்களுக்கு மத்திய அரசின் சிறப்பு உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்யாண-கர்நாடக பகுதியில் உள்ள மாவட்டங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும்.

கொரோனா ஊரடங்கால் கல்வித்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்து வரும் நாட்களில் பள்ளி-கல்லூரிகளை நடத்துவது பெரிய சவாலாக உள்ளது. கல்வி நிலையங்களை திறந்தால், அங்கு கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து ரீதியிலான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கொரோனாவுக்கு பின்பு பள்ளிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஆலோசித்து வருகிறோம். நிதி நெருக்கடி இருந்தாலும், மாணவ-மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அதிகாரிகள் நிறுத்தக்கூடாது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மந்திரி சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது-

வருகிற ஜூன் 25-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக ஒரு தேர்வு அறையில் 25 பேருக்கு பதிலாக 18 முதல் 20 பேர் வரை அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு கூடுதலாக 8,000 அறைகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். தேர்வு அறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், பல்வேறு விடுதிகளில் படித்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் இருக்கும் பகுதியிலேயே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது. குழந்தைகள் நீண்ட கால விடுமுறையில் இருப்பதால், அவர்களின் மனநிலையை கல்வியின் பக்கம் திருப்ப மக்கலவாணி என்ற யூடியூப் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்கு பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கல்வித்துறை நிபுணர்களை கொண்டு, பாடத்திட்டத்தை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுக்கும் வீடியோக்கள், யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 45 லட்சம் குழந்தைகள் அந்த சேனலை பார்த்துள்ளனர்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Next Story