61 நாட்களுக்கு பிறகு சென்டிரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறப்பு - ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே முன்பதிவு


61 நாட்களுக்கு பிறகு சென்டிரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறப்பு - ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே முன்பதிவு
x
தினத்தந்தி 23 May 2020 5:30 AM IST (Updated: 23 May 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு நேற்று டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. இதில், ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முதன்முதலாக கடந்த மார்ச் 22-ந் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், ரெயில் நிலையங்களில் மார்ச் 21-ந் தேதி முன்பதிவு செய்யப்பட்டதோடு டிக்கெட் கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து 24-ந் தேதி அடுத்தகட்ட ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை 4-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற ஜூன் 1-ந் தேதி நாடு முழுவதும் 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அறிவித்து இருந்தார். இதையடுத்து, இந்த சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 61 நாட்களுக்கு பிறகு நேற்று 3 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனால், அறிவிக்கப்பட்ட 200 சிறப்பு ரெயில்களில் எந்த ரெயிலும் சென்னையில் இருந்து இயக்கப்படவில்லை. அதே நேரத்தில், வழக்கமாக அவ்வப்போது அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் சென்னை சென்டிரல் - டெல்லி சிறப்பு ரெயிலுக்கான(ராஜ்தானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்) முன்பதிவுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே நேரத்தில், இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 27-ந் தேதி(புதன்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் டெல்லி சிறப்பு ரெயிலுக்கான (ராஜ்தானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்) அறிவிப்பு கடந்த 20-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி முதல் இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் திறக்கப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர்களில் மேற்கூறப்பட்ட 2 ரெயில்களுக்கான முன்பதிவு மட்டுமே மேற்கொள்ள முடிந்தது. ஆனால், இந்த ரெயில்களுக்கு நேற்று முன்தினமே ஆன்லைனில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், புக்கிங் கவுண்ட்டரில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், ரெயில்வே ஊழியருக்கான ஒதுக்கீட்டில் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து பலர் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டதால் முன்பதிவு ரத்தான கவுண்ட்டர் டிக்கெட்டுகளை கொடுத்து பணத்தை திரும்ப பெறவும் பலர் வந்தனர்.

ஆனால், ரத்தான டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்ப செலுத்துவது குறித்து தங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்று ரெயில்வே ஊழியர்கள் அவர்களிடம் தெரிவித்து திருப்பி அனுப்பினர்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் முற்றிலும் ஏ.சி. பெட்டிகளை கொண்டது என்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த ரெயிலில் பயணம் செய்வது வழக்கம். அவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்துவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மற்ற ரெயில் விசாரணைகள் குறித்து பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் விசாரித்து சென்றனர்.

Next Story