கவர்னர் கிரண்பெடியிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளது; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு


கவர்னர் கிரண்பெடியிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளது; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 May 2020 10:39 PM GMT (Updated: 22 May 2020 10:39 PM GMT)

புதுவையில் கவர்னர் கிரண்பெடி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் ஒரு சாதனையும் செய்ய வில்லை. அவரிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளதாக மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி, 

 புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 4 ஆண்டுகளாக பொய்யையே கூறி வந்துள்ளார். அவர் ஒரு சாதனையையும் செய்யவில்லை. மக்களுக்கு இலவச அரிசி தரும் திட்டத்தை முடக்கிவிட்டார். 

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் இல்லாமல், தான் மட்டுமே மத்திய மந்திரியை சந்தித்து ஒரு பைசா அல்லது ஒரு திட்டம் கொண்டுவந்தேன் என்று கூற முடியுமா? புதுச்சேரி மக்களுக்கு தொடர்ந்து தொல்லை தான் கொடுத்து வந்துள்ளார். அவரிடம் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே உள்ளது. கவர்னர் மாளிகையை தனது சொத்தைப்போல் பயன்படுத்துகிறார். அனைத்து திட்டங்களையும் தடுத்ததையும், கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியதையும் தான் சாதனையாக கூற முடியும். 

சேவையில் பூஜ்யம்தான். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பைசாகூட எடுத்து வரவில்லை. மாறாக புதுச்சேரி மக்களின் பணத்தில் செலவு மட்டுமே செய்துள்ளார். முதல்-அமைச்சரான நாராயணசாமிக்கு அகங்காரம் இல்லை. ஏனென்றால் முதல்-அமைச்சர் பதவிக்கு முன்பே அதைவிட பெரிய பதவிகளை வகித்துவிட்டார். அதுபோல் அமைச்சர்களும் யாரும் முதல் முறை பதவிக்கு வரவில்லை. ஆனால் கிரண்பெடி தற்போதுதான் முதல் முறையாக கவர்னர் பதவிக்கு வந்துள்ளார். 

மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை எடுத்து அனுப்பிய முடிவிற்கு அனுமதி தர மறுக்கிறார். புதுச்சேரிக்கு வருமானம் வரக் கூடாது என்ற எண்ணம்தான். கொரோனா பாதிப்பு காலத்திற்கு மாநில அரசு ரூ.2 ஆயிரமும், மத்திய அரசு அரிசி, பருப்பும் தான் வழங்கியது. மதுக்கடைகளை திறக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும். வருமானம் வந்தால்தான் ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய முடியும். 

தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கு சமமாக மதுபான வரி விதிக்க கவர்னர் வலியுறுத்துகிறார். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக மதுபான வரி வசூலிக்கவில்லை. ஆந்திராவில் 75 சதவீதம், தெலுங்கானாவில் 30 சதவீதம் மதுபான வரி விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு மாதம் ரூ.500 கோடி தேவைப்படுகிறது.

 மின்துறையில் மின்சாரம் வாங்குவதற்காக ரூ.150 கோடி தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு வந்து 59 நாட்கள் ஆகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகியவைகளை மேற்கொண்டால் போதும். மீனவர்களின் சேமிப்பு திட்டம் குறித்து கூட கவர்னருக்கு தெரியவில்லை. 

இந்த திட்டத்தில் மீனவர்களுக்கு மாநில அரசு ரூ.1,500-ம், மத்திய அரசு ரூ.3 ஆயிரமும் தரும். மத்திய அரசு கடந்த மார்ச் மாதமே இந்த பணத்தை வழங்கிவிட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் தராததால் மீனவர்களிடம் தர முடியவில்லை. தமிழக அரசு இந்த பணத்துடன், தடைக்கால நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்திவிட்டது. 

ஆனால் புதுச்சேரியில் நிதி இருந்தும் செயல்படுத்த முடியவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்க அனுமதி கேட்டு இன்று (நேற்று) முதல்முறையாக கோப்பு அனுப்ப உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story