கும்பகோணத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கும்பகோணத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 May 2020 4:16 AM IST (Updated: 23 May 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கும்பகோணம், 

கும்பகோணத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பிரபல ஜவுளிக்கடை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதியில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். கொரோனா நோய் பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் இருந்து விதிவிலக்கு அளித்து சிறிய அளவிலான கடைகளை மட்டும் திறந்து அரசு விதித்த விதிமுறைப்படி நடத்தலாம் என உத்தரவிட்டது. ஆனால் முற்றிலும் குளிரூட்டப்பட்ட கடைகள், அதிகமான ஊழியர்களுடன் பல அடுக்குகள் கொண்ட கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி தரவில்லை.

‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் பல அடுக்குகள் கொண்ட ஜவுளிக்கடையில் அதிகமான ஊழியர்களுடன் விற்பனை நடப்பதாக கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் அந்த கடையின் உள்ளே ஆய்வு செய்தனர்.

அப்போது கடையின் உள்ளே சமூக இடைவெளி விடமாலும், குளிர்சாதன வசதியுடன் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் கடையில் வியாபாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஜவுளிக்கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

கும்பகோணத்தில் பெரிய நிறுவனங்களை திறக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இந்த நிலையில் பல அடுக்குகள் கொண்ட இந்த கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார்கள். எனவே கடை ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுபோன்று அரசு உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story