பட்டுக்கோட்டை நகரின் முக்கிய நீராதாரமான காசாங்குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் காசாங்குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் காசாங்குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய நீர் ஆதாரம்
பட்டுக்கோட்டை நகரின் மத்தியில் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காசாங்குளம் 300 ஆண்டுகள் பழமையானது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் நான்கு கரைகளிலும் போக்குவரத்து நிறைந்த சாலைகள் உள்ளன. மேற்கு கரையில் காசி விசுவநாதர் கோவிலும், பெருமாள் கோவிலும் உள்ளன.
நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த குளம் ஒரு காலத்தில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. நகரில் குடிநீர் திட்டம் வந்த பிறகு தற்போது நகரின் பெரும்பகுதி மக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தூர்வார பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காசாங்குளத்தில் தண்ணீர் நிறைந்தால் நகரில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். விசுவநாதசாமி கோவிலுக்குச் சொந்தமான இந்த குளம் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது கொளுத்தி வரும் வெயிலில் குளத்தில் நீர் வறண்டு தாமரைக் கொடிகள் படர்ந்து கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடாக உள்ளது.
மேலும் குளத்தின் நான்கு புறமும் சிமெண்டு சுவர்கள் இடிந்து குளத்திற்குள் விழுந்து கிடக்கிறது. எனவே காசாங்குளத்தின் நான்கு கரைகளிலும் சிமெண்டு சுவர் எழுப்பி குளத்தில் படர்ந்துள்ள தாமரை கொடிகளையும் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் ஏரி, குளங்களையும், வாய்க்கால்களையும் தூர்வாரி மராமத்துப் பணிகள் செய்து வரும் நேரத்தில் காசாங்குளத்தையும் தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story