பேரூர் அருகே நொய்யல் ஆற்றுப்பகுதியில் பாலங்கள் கட்டும் பணி மும்முரம் குளங்கள் முழுமையாக நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நொய்யல் ஆற்றுப்பகுதியில் பாலங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதால், குளங்கள் முழுமையாக நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேரூர்,
கோவையை அடுத்த காளம்பாளையம், பேரூர், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் பாலம், சாக்கடை கால்வாய், வெள்ளதடுப்புச்சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்தது. கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும், அதிகமான அளவு சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இதனால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் அனைத்தும் குளங்களுக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அப்போது, நொய்யல் ஆற்றுப்பகுதிகளில் பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. குறிப்பாக, காளம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழியில், குனியமுத்தூர் பகுதிக்கு, பிரிக்கப்படும் கிளைவாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மீண்டும் அருகேயுள்ள நொய்யல் ஆற்றுக்குள் புகுந்தது.
அடியோடு முடங்கியது
ஏற்கனவே, பேரூர் படித்துறை அருகே வேடபட்டி செல்லும் ரோட்டில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்ததாலும், நொய்யல் ஆற்றுக்குள் அதிகமாக மழைநீர் பெருக்கெடுத்த காரணத்தால் பேரூர் படித்துறை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, பாலம் கட்டுமானப்பணிகள் அடியோடு முடங்கியது. இதேபோல, பேரூர் அருகே செல்வபுரம் சேத்துமாவாய்க்கால் பகுதி புதர்மண்டி இருந்ததாலும், அடைப்புகள் ஏற்கனவே இருந்ததாலும், மழைதண்ணீர் ஆற்றுக்குள் செல்ல வழியின்றி, மீண்டும் செல்வபுரம் எல்.ஐ.சி காலனி குடியிருப்பு பிரிவு பகுதிகளுக்குள் புகுந்தது.
ரூ.3¼ கோடி மதிப்பில்...
இந்தநிலையில் நடப்பு ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொண்டாமுத்தூர் ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இதையடுத்து, காளம்பாளையம் அணைக்கட்டு அருகே குனியமுத்தூர் கிளை வாய்க்காலில் தண்ணீர் பிரிக்கப்படும் இடத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, ஆற்றின் மீது பாலம் கட்டும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல், பேரூர் படித்துறை அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. மேலும்,செல்வபுரம் எல்.ஐ.சி., காலனிக்குள் தண்ணீர் புகாத வகையில் சேத்துமாவாய்க்கால் பகுதியில், 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.3¼ கோடி மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் மற்றும் வெள்ள தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடக்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் தொடங்க உள்ள தென்மேற்கு பருவ மழையில் கிடைக்கும் மழைநீர் குளங்களில் முழுமையாக கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story