உரிய நிபந்தனைகளுடன் மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம், உரிமையாளர்கள் கோரிக்கை
உரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
உரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை மனு
திருவாரூர் மாவட்ட திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமணி, செயலாளர் செந்தி்ல், பொருளாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக நிலைமை சீராகியுள்ளது. அரசு 50 பேர் வரை திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதித்தாலும் நடைமுறையில் வீட்டில் இருந்து திருமணம் செய்ய அனைவராலும் முடியாத நிலை உள்ளது.
மண்டபங்களில் திருமணம் செய்ய அனுமதிக்காததால் மண்டபத்தை நம்பி வாழும் புரோகிதர், சமையல் கலைஞர்கள், மணவறை அலங்காரம் செய்பவர்கள், ஒலி-ஒளி அமைப்பு தொழிலாளர்கள், மங்கள இசை கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள், வாடகைக்கு பாத்திரம் விடுபவர்்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே திருமணங்களை மண்டபத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும்.
திருமணம் நடத்த அனுமதி
திருமணத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் வரை அனுமதிக்க வேண்டும். இதற்கான அனுமதி அளிக்கும் பட்சத்தில் அரசு அறிவிக்கும் விதிமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடிப்போம் எனவும் உறுதி அளிக்கிறோம். அரசு அனுமதி அளித்தால் மண்டபத்தை நம்பி வாழும் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். வீட்டை விட மண்டபங்கள் மிகவும் பெரியதாக இருப்பதால் 100 பேர் வரை அனுமதித்தாலும் சமூக விலகலை எளிதாக கடைபிடிக்க முடியும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் உரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story