வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் 27-ந் தேதி தொடங்குகிறது
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி.) போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் போட்டி தேர்வினை எளிதில் எதிர்கொள்ள ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி http//tamilnaducareeservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் போன்றவை இடம் பெற்று உள்ளன.
கடவுச்சொல்
தேர்வர்கள் தங்களது பெயர், பாலினம், தந்தை மற்றும் தாயார் பெயர், முகவரி, ஆதார் எண், வேலைவாய்ப்பு பதிவு எண்ணை உள்ளடு செய்து, திரையில் போட்டி தேர்வு என்று குறிப்பிட்டுள்ள பகுதியை ‘கிளிக்’ செய்ய வேண்டும்.
அதன்பின்னர் பயனீட்டாளர் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். தாங்கள் எந்த தேர்வுக்கு தயாராகிறீர்கள் என்பதை உள்ளடு செய்து, அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம். போட்டி தேர்வை எதிர்கொள்ள மாதிரி தேர்வை ஆன்லைனில் எழுதலாம். மேலும் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0423-2444004, 0423-2223346 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story