கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டதாக மாநில அரசை கண்டித்து பா.ஜனதா போராட்டம்


கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டதாக மாநில அரசை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 5:22 AM IST (Updated: 23 May 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக மாநில அரசை கண்டித்து பாரதீய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தவறியதாக மாநில அரசை கண்டித்து பாரதீய ஜனதா போராட்டம் நடத்தும் என மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார்.

இதையடுத்து நேற்று பாரதீய ஜனதாவினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாரதீய ஜனதாவினர் 'மராட்டியத்தை காப்போம்' என்ற பதாகைகளுடன் வீட்டின் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் முன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

இதில் முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே, மும்பை பாரதீய ஜனதா தலைவர் மங்கல் பிரதாப் லோதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சயான் கோலிவாடா கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பா.ஜனதாவின் இந்த போராட்டத்துக்கு ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற ஒரு சூழலில் பாரதீய ஜனதாவால் எப்படி அரசியல் செய்ய முடிகிறது என மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோல கொரோனா விவகாரத்தில் மராட்டியத்தை கேரளாவுடன் ஒப்பிட்டு பேசிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் தேவேந்திர பட்னாவிசை சிவசேனா கட்சி சாம்னா பத்திரிகையில் கடுமையாக விமர்சித்து உள்ளது.

Next Story