மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்


மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2020 11:59 PM GMT (Updated: 22 May 2020 11:59 PM GMT)

புதுச்சேரியில் மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி, 

 புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

கவர்னர் மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் புதுவை மாநில கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்பட பல நிலுவைதொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கூறினேன். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுவை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. 

இதுபோன்ற நிலையை புரிந்து கொண்டு, அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். இதற்கு கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story