விவசாய நிலங்களில் சூரியஒளியால் இயங்கும் மோட்டார் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்


விவசாய நிலங்களில் சூரியஒளியால் இயங்கும் மோட்டார் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 5:30 AM IST (Updated: 23 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் சூரியஒளியால் இயங்கும் மோட்டார் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

வேலூர், 

தமிழகத்தில் மின்சார உபயோகத்தை குறைக்கவும், இலவச மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் சூரிய ஒளியினால் இயங்கும் மோட்டார் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 5, 7.5, 10 ஹெச்.பி. மோட்டார்கள் 70 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு அமைத்து கொடுக்கப்படும்.

2020-21 -ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 215 விவசாயிகளுக்கு சூரியஒளியினால் இயங்கும் மோட்டார் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மோட்டார்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரியஒளியால் இயங்கும் மோட்டார் அமைப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் விலை விபரங்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் சூரிய ஒளியால் இயங்கும் மோட்டார் அமைக்க விருப்பமுள்ள வேலூர் மாவட்ட விவசாயிகள் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

Next Story