நாகை மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆய்வு


நாகை மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2020 12:14 AM GMT (Updated: 23 May 2020 12:14 AM GMT)

நாகை மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரூ.12½ கோடியில் குடிமராமத்து பணிகள்

நாகை மாவட்டத்தில் வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தின் சார்பில் ரூ.12 கோடியே 50 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் 39 குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 12 ஆயிரத்து 100 ஏக்கர் பாசனப்பகுதிகள் பயன்பெறும்.

கீழையூர் ஊராட்சி ஒன்றியம், வெண்மணச்சேரி கிராமம் சீராவட்டனார் வடிகால் இடதுகரையில் உள்ள கொன்னையடி வாய்க்கால் ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெறும் தலைப்பு மதகு புனரமைக்கும் பணிகளையும், கீழ்வேளூர் ஊராட்சி தன்னிலப்பாடி கிராமம் கிளோரியன் வாய்க்கால் மற்றும் ஐவேலி வாய்க்கால், சின்னத்தும்பூர் வாய்க்கால், ஆலமழை வாய்க்கால், தலையாழமழை வாய்க்கால், கீராந்தி வாய்க்கால் உள்ளிட்ட பரிவு வாய்க்கால்களில் ரூ.20 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வு

தன்னிலப்பாடி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் மரவனாறு கடைமடை இயக்கு அணை மறு கட்டுமான பணிகளையும், திருக்குவளை வட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் சூரமங்கலம் கிராமத்தில் சந்திரா நதிநெடுகை 3 கி.மீட்டர் முதல் 18 கி.மீட்டர் வரை தூர்வாரும் பணி மற்றும் சினையாங்குடி, பையூர், நெல்லடி, பண்டாரவோடை, வாழக்கரை பகுதிகளில் இயக்கு அணை புனரமைக்கும் பணிகளையும், பாலக்குறிச்சி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பாலக்குறிச்சி தலைப்பு மதகு மறு கட்டுமான பணிகளையும் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், செல்வக்குமார், சண்முகம் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story