பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து   தொழிற்சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 12:16 AM GMT (Updated: 23 May 2020 12:16 AM GMT)

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஊட்டி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குணசேகரன்(எல்.பி.எப்.), கணேசன்(சி.ஐ.டி.யு.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சாரத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கக்கூடாது, தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை முழுமையாக உடனே வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து மண்டல பொதுச்செயலாளர் இப்ராஹிம் கூறியதாவது:-

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. நடப்பாண்டில் ஓய்வு பெறுகிறவர்களுக்கு பண பலன்களை கொடுக்க முடியாததால், ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்வினியோகத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினால் நாடு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டு பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சமூக இடைவெளி

இதேபோன்று கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு., தொ.மு.ச. ஆகிய தொற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதில் சி.ஐ.டி.யு. தலைவர் யோகசசி, தொ.மு.ச. மண்டல செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செவிடிப்பேட்டை அரசு ஐ.டி.ஐ. முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் டி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து ரிச்மண்ட், மேங்கோரேஞ்ச், மசினகுடி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story